நீதி கிடைப்பதற்காக  ஒத்துழையுங்கள்-கைதிகள் உருக்கம்

நீதி கிடைப்பதற்காக ஒத்துழையுங்கள்-கைதிகள் உருக்கம் Featured

/ Thursday, 12 October 2017 10:31
 எங்கள் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படுவதற்கும் எமக்கு நீதி கிடைப்பதற்குமாக நாளை வெள்ளிக்கிழமை வடக்கில் முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு எல்லோரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
"தமிழ் அரசியல் கைதிகளாகி நாங்கள் அரசிடம் எமது வழக்குகள் தொடர்பாக சில கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றோம். 2009ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு தொடர்ச்சியாக 4 வருடங்கள் எந்தவித வழக்கு விசாரணைகளுமின்றி கொழும்பு 6ஆம் மாடி, பூஸா போன்ற சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்தோம்.
 
2013ஆம் ஆண்டு எமக்கெதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு 2017ஆம் ஆண்டு வரை 58 தடவைகள் வழக்கிற்கு அழைக்கப்பட்டிருந்தோம். வவுனியா மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட எமது வழக்கை சாட்சிகளுக்கு உயிராபத்து இருப்பதாகக் கூறி அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றியுள்ளனர்.
 
அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் எமது வழக்குத் தொடரப்படுமாயின் மொழிப் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடுவதோடு அங்கு எமது தரப்பில் ஒரு சட்டத்தரணியையும் நியமிக்க செய்ய முடியாது. இவ்வாறான பல பிரச்சினைகளுக்கும் மத்தியில் எமது வழக்கை மாற்றியிருப்பது எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதியாகவே நாம் கருதுகின்றோம்.
 
அநீதியை எதிர்த்து எமது வழக்கைத் தொடர்ந்தும் வவுனியா மேல் நீதிமன்றத்திலேயே நடத்துமாறும் துரிதமாக வழக்குக்கு முடிவைப் பெற்றுத்தருமாறு கோரியும் நாம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
 
எமது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாகப் பல கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்திய சகல பொது அமைப்புக்களுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றோம். 
 
நாளை வெள்ளிக்கிழமை வடக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கும் எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இரந்து கேட்டுக்கொள்கின்றோம்" என்றுள்ளது. 

Please publish modules in offcanvas position.