இளைஞரை தாக்கிய உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு இடமாற்றம்

இளைஞரை தாக்கிய உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு இடமாற்றம்

/ Thursday, 12 October 2017 13:55

கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் போது இளைஞர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில் தங்காலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் துஷார தலுவத்த உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாத்தறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் ஆர்ப்பாட்ட பேரணியில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலின்போது, இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச மற்றும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 6 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சுசந்த பண்டார கருணாரத்ன என்ற குறித்த நபர் ஒரு ஊடகவியலாளர் எனவும் அவர், அவ்வார்ப்பாட்டத்தில் பதாதையை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக, சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

ஊடகவியலாளராக பணியாற்றுகின்ற அவர் தாக்கப்படவில்லை எனவும் நீதிமன்ற தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு மாத்திரமன்றி, பொலிஸாருடன் முறுகல் நிலையை ஏற்படுத்தியதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் குறித்த விடயம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதோடு, பொலிஸ் ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Please publish modules in offcanvas position.