பெண்களை மறக்காத நல்லாட்சி

பெண்களை மறக்காத நல்லாட்சி

இலங்கையில் 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015வரை நிலவிவந்த குடும்ப ஆட்சியானது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு 2015 ஜனவரி 8ஆம் திகதி பலரினதும் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நல்லாட்சியானது கொண்டுவரப்பட்டது. இந்த நல்லாட்சி ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது பல விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.

என்றாலும் பெண்களுக்கான முக்கியதுவம், பெண்களுக்கு அதியுயர் பதவிகளை வழங்குவதன் மூலம் நல்லாட்சி குறித்து பெண்களின் எதிர்பார்ப்புகள், அபிலாஷைகள் வலுப்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது.பெண்களுக்கு வாக்குரிமை அளித்து சர்வதேசத்தில் பெருமைபெற்றது இலங்கை 1931ஆம் ஆண்டு இலங்கையில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏக காலத்தில் வாக்குரிமை வழங்கப்பட்டது.ஆங்கிலேயர்களின் காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளில் முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கிய தெற்காசிய நாடு என்ற பெருமை இலங்கையையே சாரும்.

வளர்ச்சியடைந்த பல நாடுகளில் கூட அப்போது பெண்களுக்கு வாக்குரிமை வழங்காத போதிலும், இலங்கை பெண்களுக்கு வாக்குரிமை வழங்கி உலக பெண்களையும் பெருமைகொள்ள வைத்தது.தெற்காசியாவிலேயே குறைந்தளவு பெண்களின் பிரதிநிதித்துவம் கொண்ட ஒரே நாடு இலங்கை மாத்திரமே.இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகள் பெண்களை நாட்டின் அரச தலைவர்களாக உருவாக்கிய நாடுகள்என்பது குறிப்பிடத்தக்கது.பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வலிறுயுத்தல்

இலங்கை சனத்தொகையில் 52 சத வீதத்துக்கும் அதிகமாகக் கொண்ட பெண்கள், தமது அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு குறைந்தது 30 சதவீதமான பெண்களையாவது தமது வேட்பாளர் பட்டியலில் சேர்க்கும்படி கட்சிகளிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தினர்; போராடிப் பார்த்தனர்.
பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான பல பெண்கள் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வந்தன.
குறிப்பாக, கடந்த ஒரு தசாப்தத்திற்குள் இதற்காகவே பல பெண்கள் அமைப்புகள் தோற்றம் பெற்று, முனைப்புடன் செயற்பட்டு வந்துள்ளன.
அரசியல் விழிப்புணர்வை ஊட்டுவதற்காக சாதாரண பெண்கள் மற்றும் அரசியல் கட்சிகளையும், அவ்வாறான அமைப்புகள் அரசியல்வாதிகள் மத்தியிலும் இயங்கிவந்துள்ளன.அரசியல் அமைப்புகள், சங்கங்களில் இணைந்து செயற்படும் உரிமை பெண்களுக்கும் உண்டு.

பெண்களின் அரசியல் பிரவேசம்சனத்தொகையில் 52 சதவீத எண்ணிக்கை கொண்ட பெண்களின் அரசியல் பிரவேசம் மிகமிகக் குறைவே.இலங்கையின் சனத்தொகையில் ஆண்களைவிட பெண்களே அதிகம் உள்ளனர். இருப்பினும், பெண்களின் அரசியல் ரீதியான பிரவேசம் மிகவும் குறைந்தளவாகவே உள்ளது.இலங்கையில் இதுநாள்வரை நடத்தப்பட்டு வந்த உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடக்கம் ஜனாதிபதித் தேர்தல்வரை பெண்களில் பலர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும், இவர்கள் அனைவரும் அரசியல் பின்புலத்தைக் கொண்டவர்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.

இதற்கமைய இன்றைய நல்லாட்சியில் நாடாளுமன்றில் அங்கம்வகிக்கும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நீதியமைச்சர் தலதா அத்துகோரல, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே, ஹிருணிகா பிரேமசந்திர, சுமேத குணவதி ஜயசேன, கீதா குமாரசிங்க, ரோகினி குமாரி கவிரத்ன, பவித்ரா வன்னியாராச்சி, சிறியானி விஜேவிக்கிரம, துசித்தா விஜேமான்ன, அமைச்சர் சந்திராணி பண்டார, பிரதிஅமைச்சர் அனோமா கமகே, சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா போன்ற 13 பெண் பிரதிநிதிகளுள் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் அரசியல் பின்புலத்துடன் அரசியலுக்குள் நுழைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே சாதாரண பெண்களையும் அரசியல் வெள்ளோட்டத்தில் இணைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும், எமது நாட்டின் நாடாளுமன்றத்தில் பெண்களின் உரிமைகளுக்காகவும், அதனைப் பாதுகாக்கின்ற சட்டங்கள் இயற்றப்படும் போதும், வாதப் பிரதிவாதங்கள் செய்பவர்களாக அதிகமான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பது காலம் கடந்த ஞானமாக உணரப்பட்டு நல்லாட்சியில் அதற்கான வழிகோலப்பட்டது.நல்லாட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம்இதற்கமைய இலங்கை அரசியலில் தீர்மானம் மேற்கொள்ளுதலில் பெண்களின் பங்கை அதிகரிக்கும் நோக்குடன், மாகாண சபைத் தேர்தல்களுக்காக சமர்ப்பிக்கப்படும் வேட்பு மனுக்களில் 30% பெண் வேட்பாளர்கள் கட்டாயமாக உள்ளடக்கப்பட வேண்டுமென்ற சட்ட திருத்தத்தைக் கொண்டுவர அரசு தீர்மானித்ததுடன், அது பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றியும் பெற்றது.

இந்த வெற்றியானது அரசாங்கத்தை விட பெண்களுக்கு நல்லாட்சியில் கிடைத்த வெற்றி என்பது கூறுவதில் தவறில்லை. அத்துடன், இலங்கையைப் பொறுத்தவரை அரசியலில் பெண்களின் பங்கு என்று பார்க்கும்போது உலகின் முதல் பெண் பிரதமர் மற்றும் இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி என்ற வரையறையோடு நின்றுவிடாமல் இலங்கை வரலாற்றிலேயே முதலாவது பெண் நீதியமைச்சராக, நல்லாட்சியின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திருமதி.தலதா அத்துகோரல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி நியமிக்கப்பட்டமையானது நல்லாட்சியில் பெண்களுக்கான முக்கியத்துவத்தை அதிகம் உணர்த்துவதாய் அமைகின்றது.உலகின் முதலாவது பெண் பிரதமராக, திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவை தெரிவுசெய்ததன் மூலம் உலக அரங்கில் இலங்கை தனது பெயரை பெருமையடையவைத்ததைப் போலவே இலங்கை முதலாவது பெண் நீதியமைச்சராக அமைச்சர் தலதாவை தெரிவுசெய்து நல்லாட்சி அரசு, தமது ஆட்சியில் பெண்களின் வகிபாகத்தை பறைசாற்றியுள்ளது.

அதுமட்டுமின்றி, கடந்த கால ஆட்சியின் ஊழல், மோசடிகளைக் கண்டறிவதற்கான விசாரணைகளை மேற்கொள்வதற்காக, ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட மிகவும் பொறுப்பு மிக்க இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தலைவராக டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.இவரின் தலைமையின் கீழ் பல முக்கிய இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவரத் தொடங்கியதுடன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் இவரே நீதிமன்றிற்கு கொண்டுவந்தார்.

இந்நிலையில், இவர் தனது தனிப்பட்ட காரணங்களின் நிமிர்த்தம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி பதவியை இராஜினாமா செய்திருந்தார்.பின்னர் இவரின் பதிவிக்கும் பெண் ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.மேலும் மீகஸ்முல்ல மதுவரி திணைக்களம், நிலுகா ஏக்கநாயக்க மத்திய மாகாண ஆளுநர், அமரா பியசீலி ரத்னாயக்க வடமேல் மாகாண ஆளுநர் என, நல்லாட்சியில் பல முக்கிய பொறுப்புகளுக்கு பெண்கள் நியமனம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், அண்மையில் மட்டகளப்பு மாவட்ட முன்னாள் அரச அதிபர் திருமதி.சார்ள்ஸ் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமையானது தமிழ் பெண்ணொருவருக்கு நல்லாட்சியில் வழங்கப்பட்ட அதிமுக்கியதுவம் வாய்ந்த ஒரு பதவி என்பதுடன், தமிழ் பெண்ணொருவர் இவ்வாறான முக்கிய பதவிக்கு நியமிக்கப்பட்டமை இதுவே முதற்றடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக 2012 முதல் பணியாற்றிய சறோஜினிதேவி மாவட்ட அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.மாவட்டத்தின் வீதி, விவசாய, மீன்பிடி, உட்கட்டமைப்பு, வீடமைப்பு, மீள்குடியேற்றம், நீர்ப்பாசனம் போன்ற திட்டங்களுக்கு அவர் அளப்பெரும் பங்காற்றியிருந்தார்.

ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் மாவட்டத்தின் குறைபாடுகளை சேகரித்து பல மில்லியன் நிதியைக் கொண்டுவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாதவாறு பெண்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் அதிகரித்தே காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்ற விடயத்தில் பெண்களின் பங்களிப்பு குறைந்தளவே காணப்படுகின்றது.
அதற்கான காரணங்கள் ஆராயப்படவேண்டிய ஒன்றாகவே காணப்படுகின்றது.

இலங்கை பாரம்பரிய கலாசார, மரபுகளைக் கட்டிக்காக்கும் ஒரு நாடு. இவ்வாறு கலாசாரத்தை முன்னிலைப்படுத்துவதால் பெண்கள் பொது விடயங்களுக்கு முன்னிலையாவதை பெரும்பாலும் விரும்பாதவர்களாகவே இருக்கின்றனர். (இதற்கு விதிவிலக்குகளும் உள்ளன.) என்றபோதிலும், பெரும்பாலும் இவ்வாறான சூழ்நிலைகளே பெண்களை அரசியல் பிரவேசத்திற்கு நுழையவிடாமல் தடுக்கின்றது.
அதனையும் புறந்தள்ளி அரசியலுக்குள் நுழையும் பெண்கள் ஆண்வர்க்கத்தினரின் பல அவமான பேச்சுகளுக்கும் கேலி கிண்டல்களுக்கும் ஆளாகவேண்டியுள்ளது.

அண்மையிலும் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் முக்கிய பெண் உறுப்பினரும் இவ்வாறான அவமானகர சொல் வீச்சுகளுக்கு இலக்கானார். இதனை ஆண் வர்க்கத்தினர் பெண்களை வீழ்த்தும் இலகு வழிமுறையாகவும் கைக்கொள்கின்றனர்.இவ்வாறான சமூக சூழலில் (பெண்களுக்கு உயர்பதவிகள் வழங்கப்படுவது தவிர்த்து) பெண்களுக்காக அரசியல் அங்கத்துவம் அதிகரிக்க நல்லாட்சி சட்டங்களை இயற்றினாலும் அது முழுக்க சாத்தியமானதாக மாறும் என்பது கேள்விக்குறியே.

அதன்படி, அரசியலில் ஈடுபட முன்வரும் பெண்களின் அடிப்படை உரிமைகளை (பெண்ணியம்) பாதுகாப்பதற்கும் நல்லாட்சி அரசு உரிய சட்டங்களை வகுக்குமாயின், பெண்களின் அரசியல் பிரவேசம் எதிர்பார்த்தளவு அதிகரிக்கும்.அவ்வாறான பெண்களின் அரசியல் அதிகரிப்பே உண்மையான நல்லாட்சி ஒன்றைக் கொண்டுவரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

ஆக்கம்-மகேஸ்வரி விஜயானந்தன்

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top