மைத்திரிக்கு “நோ” போல் ஆனது நோபல்

மைத்திரிக்கு “நோ” போல் ஆனது நோபல்

சமாதானத்துக்கான, நோபல் பரிசை இம்முறை வெற்றிகொள்ளும் வாய்ப்புக்களை அதிகம் கொண்டிருப்பவர்களில் ஒருவராக, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்டிருந்த நிலையில் சர்வதேச அணு ஆயுத ஒழிப்பு பிரசார குழுவுக்கு (ஐ.சி.ஏ.என்) இந்த ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது என கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

அணு ஆயுதங்கள் மீதான ஒப்பந்த தடையை உருவாக்க சிறப்பான களப்பணி ஆற்றியமைக்காக, இந்த விருது வழங்கப்படுகின்றது என நோபல் பரிசுக் குழு தலைவர்பெ ரிட் ரீஸ்அண்டர்சன் எனக் கூறியுள்ளார் அணு ஆயுதங்களின் பயன்பாடு ஆபத்தை ஏற்படுத்துமோ என்று கடந்த பல ஆண்டுகாலமாக நமக்கு இல்லாத பயம் தற்போதை காலகட்டத்தில்அதிகமாகவே இருக்கிறது என அவர் தெரிவித்தார்.அவர், வடகொரிய விவகாரத்தை மேற்கோள் காட்டினார்.அணு ஆயுதம் வைத்துள்ள நாடுகள், படிப்படியாக அணு ஆயுதங்களை அழிப்பது குறித்த பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம், ஐ.சி.ஏ.என் அளித்த அழுத்தத்தின் காரணமாக, 122 நாடுகள், படிப்படியாக அணு ஆயுதங்களை குறைத்து, தடை செய்யும் ஐ.நாவின் ஒப்பந்தத்தை எடுத்துக்கொண்டன. ஆனால், அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக அறியப்படும் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்களின் கூட்டணியான ஐ.சி.ஏ.என், 10ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு ஸ்விட்சர்லாந்தின், ஜெனிவா நகரில் செயல்பட்டு வருகிறது.

இந்த குழு, டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள விழாவில், 1.1மில்லியன் டொலர் பரிசு தொகை, நோபல் பதக்கம் மற்றும் பட்டயத்தை பெறும்.
நோபல் பரிசின் சான்று, "சில நாடுகள் தங்களது அணுஆயுதங்களை நவீனப்படுத்தி வருகின்றன. வட கொரியாவின் விஷயத்தில் நிருபிக்கப்பட்டது போல பல நாடுகள் அணுஆயுதங்களை கொள்முதல் செய்யக்கூடிய ஆபத்து உள்ளது' என்கிறது.

வட கொரிய தலைவர் கிம்ஜாங் உன், இந்த ஆண்டு பல ராக்கெட்டுகளை ஏவியதோடு, அணுஆயுத சோதனையையும் நடத்தினார். இது அவருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையே சொற்போரை உருவாக்கியது.கடந்த ஆண்டு வெற்றி பெற்றவரான கொலம்பியாவின் ஜனாதிபதி ஹுவான் மான்வெல் சாண்டோஸ் அமைதிக்கான பரிசு, சொர்க்கத்தில் இருந்து கிடைத்த விருது போல உள்ளது என்றார்.

அவரின் அரசு அந்நாட்டின் முக்கிய கிளர்ச்சியாளர்கள் குழுவான பார்க்கிடம் பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தத்தை கொண்டுவர முயன்றது.
நோபல் குழுவின் முடிவு, அணுஆயுத எதிர்ப்பு குறித்த பிரேரணைகளுக்கு சரியான நேரத்தில் வலுவூட்டும் வகையில் உள்ளன.
வடகொரியா தனது அணு திட்டத்தை மேம்படுத்தி வருவது. இரானின் அணுஆயுத திட்டம் நிலுவையில் உள்ளது. அமெரிக்க மற்றும் ரஷியா தனது அணுஆயுதங்களை நவீனப்படுத்தி வருகின்றன. இத்தகைய நிலையில் இந்த முடிவு வந்துள்ளது.ஏற்கனவே அணுஆயுதங்கள் பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் பெரும்பான்மையாக நாடுகள், அணுஆயுதங்களை உருவாக்க மாட்டேன் என்றும், ஏற்கனவே அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகள் படிப்படியாக அவற்றை அழிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்த முறைப்படி, ஏற்கனவே அணுஆயுதங்களை வைத்துள்ள நாடுகள் தங்களின் ஆயுதங்களை கைவிட முடியாது என்னும் விஷயம் பிரச்சாரகர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது. அதனால் ஐ.சி.ஏ.என் மாற்று அணுகுமுறையை கையாண்டது.இந்த விவகாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அணுஆயுதங்களுக்கு முழுமையாக தடைவிதிக்க கூடிய அரசிற்கு புதிய ஒப்பந்தகளை கையெழுத்திட செய்ய முடிவு செய்தது.

சரியான தருணத்தில் சரியான வெற்றியாளரைத் தேர்ந்தெடுத்த நோபல் பரிசுக் குழுவிற்கு பாராட்டுக்கள் உரித்தாகவேண்டும். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் நோபல் பரிசுக்காக, பரிந்துரை செய்யப்பட்டுள்ள செய்தி வெளியானபோது இலங்கையில் மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியிருந்தன. அதிலே தமிழர் சார்பில் வெளியான கருத்துக்கள் இன்னமும் ஆக்கபூர்வமான முறையில் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை முன்வைக்காது அடையாளச் சமிக்ஞையாக ஆங்காங்கே ஒரு சில நடவடிக்கைகளை எடுத்தமைக்காக பரிசை வழங்குவது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதாகவே இருந்தது. நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் அரசியல்தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் அரசியல் உறுதிப்பாட்டுடன் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்தால் அதற்காக நோபல் பரிசு வழங்கினால் தமிழர்களும் அதனை உளமார வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை. அப்படி இன்றி வெறுமனே அடையாள சமிக்ஞை செயற்பாடுகளுக்காகவும் கவர்ச்சிமிக்க வாய்மூல உறுதிமொழிகளையும் நம்பி பரிசை வழங்கிவிட்டால் தர்மசங்கடத்திலேயே போய்முடியும்.

மியன்மாரில் இராணுவ சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளிப்படுத்திய உறுதிப்பாட்டுக்காகவும் ஜனநாயக மறுமலர்ச்சிக்காககுரல்கொடுத்தமைக்காகவும் ஆங் சான் சூச்சிக்கு 1991ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் மியன்மார்அரசாங்கத்தின் தலைவராக இருந்துகொண்டு அந்த நாட்டின் சிறுபான்மையினரான ரோஹிஞ்ஞா முஸ்லிம்களுக்கு எதிராக இராணுவத்தினரும்பௌத்த வெறியர்களும் கட்டவிழ்த்துவிட்டுள்ள இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டை தடுத்துநிறுத்தத்தவறியமைக்காக அவரது நோபல் பரிசை பறிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுவருகின்றன. ஏற்கனவே வழங்கப்பட்ட பரிசை திரும்பப் பெறமுடியாது என நோபல் குழு அறிவித்த போதும் பெரும் தர்மசங்கடமான நிலையை எதிர்நோக்கியுள்ளது.

இலங்கை ஜனாதிபதிக்கு ஒருவேளை நோபல் சமாதானப் பரிசை வழங்கியிருந்தால் தற்போது இல்லாவிட்டாலும் நீண்ட காலம் செல்லும் முன்பே இவ்வாறானதொரு தர்மசங்கட நிலைக்கு நோபல் பரிசுக்குழு முகங்கொடுத்திருக்க நேர்ந்திருக்கும் என்பது திண்ணம்.சரியான தருணத்தில் பொருத்தமான அமைப்பை நோபல் பரிசிற்காக தேர்ந்தெடுத்தமையால் வரவிருந்த தர்மசங்கடநிலையை பரிசுக்குழு தவிர்த்துக்கொண்டதென்றால் மிகையல்வே.

 

ஆக்கம்-நிதர்சனன்

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top