'கா.க.போ' விஜய் சேதுபதி முதல் 'காலா' ரஜினிகாந்த் வரை

'கா.க.போ' விஜய் சேதுபதி முதல் 'காலா' ரஜினிகாந்த் வரை Featured

/ Friday, 15 September 2017 04:49

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்! ஒரு ஆகச்சிறந்த திரைப்படத்திற்கு இவையனைத்தும் மிக இன்றியமையாத ஒன்று. ஒரு நல்ல கதைக்கு திரைக்கதையென்பது உடலை போன்றது, ஒரு நல்ல திரைக்கதைக்கு வசனம் என்பது உயிரைப்போன்றது. மனித உணர்வுகளை துல்லியமாக பதிவு செய்வதில் வசனங்களின் பங்கு இன்றியமையாதது. மிக எளிமையான கதையையும் நல்ல திரைக்கதை, வசனத்தின் மூலம் வலுசேர்க்க முடியும் அதற்க்கு உதாரணமாக பல படங்கள் இங்குண்டு. சுஜாதா, பாலகுமாரன், சுபா என கதைக்கு வலுசேர்க்கும் திரைக்கதை, வசன எழுத்தாளர்கள் பலரை இந்த தமிழ் திரையுலகம் கண்டுகொண்டு இருந்தது, இருக்கின்றது. தற்பொழுது பல இளம் வசன எழுத்தாளர்களின் வருகை தமிழ் சினிமாவின் எழுச்சியை நம் கண்முன் நிறுத்தி வருகின்றது. அந்த வகையில் ஒரு இளம் வசன எழுத்தாளரை பற்றிய தொகுப்பு தான் இந்த இன்சைட் கோலிவுட்.

காதலும் கடந்த போகும் திரைப்படத்தில் தனக்கு கிடைத்த இடங்களில் எல்லாம் மிகவும் எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி இன்று விக்ரம் வேதா திரைப்படத்தில் ஒரு நடிகனாகவும், ஒரு தேர்ந்த வசன எழுத்தாளராகவும் கவனம் ஈர்த்திருக்கும் மணிகண்டனை காலா திரைப்பட படப்பிடிப்பின் இடைவேளையில் சந்தித்தோம்.

நீங்க திரைத்துறைக்கு வந்தது எப்படி மணிகண்டன்?

"எனக்கு மிமிக்ரி ரொம்ப நல்லாவே வரும், கலக்கப்போவது யாரு நாலாவது சீசன்ல ரன்னரப்பா வந்தேன். அப்பறம், நாளைய இயக்குனர் ரெண்டாவது சீசன்ல ஒரு சில குறும்படங்கள்ல நடிச்சேன், டயலாக் எழுதினேன். நான் நடிச்ச 'என் இனிய பெண் நிலவே' குறும்படத்த அருண் ராஜா காமராஜ் தான் டைரக்ட் பண்ணிருந்தாரு அந்த படத்துக்காக அந்த சீசனோட சிறந்த நடிகர் விருது எனக்கு கிடைச்சது. அதுமட்டுமில்லாம அந்த படத்தோட டயலாக் பாத்துட்டு மதன் சார் ரொம்பவே பாராட்டுனாரு. அதுக்கு அப்பறம் டப்பிங் ஆர்ட்டிஸ்டா நிறைய படங்கள்ல வேலை பார்த்தேன். ரொம்ப நாளைக்கு பிறகு பிட்ஸா 2 படத்துக்கு டயலாக் எழுதுற வாய்ப்பு கிடைச்சது. அது மட்டுமில்லாம அந்த படத்துக்கு நான் தான் இணை இயக்குநராவும் வேலை பார்த்தேன். அந்த அனுபவத்த வச்சு 'நரையெழுதும் சுயசரிதம்'னு ஒரு கதைய விருதுகளுக்கு அனுப்புறத்துக்காகவே டைரக்ட் பண்ணேன். அந்த படம் நிறைய இன்டெர்நேஷனல் அவார்ட்ஸும் வாங்குச்சு.

 திடிர்னு ஒருநாள் நண்பர் ஒருத்தர் மூலமா நலன் சாரோட 'காதலும் கடந்து போகும்' படத்துல முரளின்னு ஒரு கேரக்ட்டர் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த படத்துல எனக்கும், விஜய்சேதுபதி அண்ணனுக்கும் நிறைய காம்பினேஷன் சீன்ஸ் இருக்கும். அவரோட நடிப்பை பாத்துட்டு பல நேரம் பிரமிச்சுப்போயிருக்கேன். அதுக்கு அடுத்து கிடைச்ச வாய்ப்பு தான் 8 தோட்டாக்கள். அந்த படத்தோட டைரக்டர் ஸ்ரீகணேஷ நாளைய இயக்குனர்ல இருந்தே எனக்கு நல்ல தெரியும். அந்த படம் பண்ணிக்கிட்டு இருக்கும் போதே வந்த வாய்ப்பு தான் விக்ரம் வேதா" என்று தன்னுடைய பயணத்தை பகிர்ந்துகொண்டார் மணிகண்டன்.

விக்ரம் வேதா திரைப்படத்தில் நடிகர், வசன எழுத்தாளர் இந்த வாய்ப்பு எப்படி?

'காதலும் கடந்து போகும்' படத்துல நடிச்சப்பயே விஜய் சேதுபதி அண்ணா எனக்கு ரொம்ப நெருக்கம் ஆயிட்டாரு. என்னோட ஒவ்வொரு அசைவையும் வாட்ச் பண்ணிட்டே இருப்பாரு. என்ன ஹெல்ப் வேணுன்னாலும் கேளுன்னு மனசார சொல்லுவாரு. விக்ரம் வேதாள ஒரு ரோல் இருக்குனு சொல்லி என்ன நடிக்க வச்சது அவர் தான். அதுமட்டுமில்லாம நான் டயலாக் நல்ல எழுதுவேன்னு புஷ்கர்-காயத்ரி ரெண்டு பேர் கிட்டயும் சொல்லி அந்த வாய்ப்பையும் எனக்கு வாங்கி கொடுத்தது விஜய் சேதுபதி அண்ணா தான். விஜய் சேதுபதி அண்ணா இல்லனா எனக்கு விக்ரம் வேதா கிடைச்சிருக்காது தலைவா!

 விக்ரம் வேதா திரைப்படத்தில் மறக்கமுடியாத தருணம் எது?

படத்துல விஜய் சேதுபதி அண்ணாவுக்கும், மாதவன் சாருக்கும் நடக்குற விசாரணை காட்சி தான் முதல்ல ஷூட் பண்ணோம். அந்த சீனுக்கு நான் எப்படி டயலாக் எழுதினாலும் எனக்கு போதும்ணே தோணல. ஏன்னா ரெண்டுபேருமே பெரிய ஆக்டர்ஸ் அவங்களோட ஃபர்ஸ்ட் சீன் செமயா இருக்கனுன்னு எக்ஸ்பெக்ட் பண்ணேன். குருதிப்புனல் படத்துல நடக்குற விசாரணை சீன் மாதிரி இருக்கனுன்னு பிளான் பண்ணி பண்ணது தான் அந்த சீன். அந்த சீன் பாத்தாலே ஒரு டாம் அண்ட் ஜெர்ரி ஃபீல்ல இருக்கும். அந்த சீன்க்கு தியேட்டர்ஸ்ல நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. விஜய் சேதுபதி அண்ணாவும், மாதவன் சாரும் ஷூட்டிங் ஸ்பாட்ல அவங்கள மறந்து விக்ரம், வேதவா இருந்தாங்கனு தான் சொல்லணும். ஏன்னா ஒரு சில டயலாக் நான் சொல்லும்போது விக்ரம் இப்படி பண்ணமாட்டான், வேதா இப்படி பண்ணமாட்டானு சொல்லி சேஞ்சஸ் பண்ணுவாங்க. படத்துக்கு கிடைச்ச ரெஸ்பான்ஸ் பாத்துட்டு விஜய்சேதுபதி அண்ணா என்ன கூப்பிட்டாரு, ஒரு பத்து நிமிஷம் கட்டி பிடிச்சுக்கிட்டு விடவே இல்ல அவருக்கு அவ்ளோ சந்தோசம் அத லைஃப்ல எப்பயுமே மறக்கமாட்டேன் தலைவா!

ஒரு வசன எழுத்தாளராக ஒரு படத்திற்கு எப்படி உங்களை தயார்படுத்திக்கொள்வீர்கள்?

நான் எப்பயுமே பாக்குற, பழகுறவங்கட்ட இருந்து தான் வசனங்களை எடுப்பேன். பொதுவாவே நான் ஒரு வாயாடி, நிறைய பேசுவேன். ஒரு 28வயசு பையன் எத்தன பேர்ட பழகிருப்பானோ அத விட நான் அதிகமா பழகிருப்பேனு நிச்சயம் சொல்லுவேன். ஒவ்வொரு நாளும் வேற வேற மனிதர்கள பார்த்து பழகுன அனுபவம் தான் டயலாக் ரைட்டிங்க்ல ரொம்ப உதவிய இருக்கு.

 நடிப்பு, வசன எழுத்தாளர் இவை இரண்டில் நீங்கள் செல்ல விரும்பும் பாதை எது?

"ரெண்டுலயுமே கவனம் செலுத்திக்கிட்டு தான் இருக்கேன். இப்போ காலா படத்துல நடிச்சுக்கிட்டு இருக்கேன். இப்போ வர நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனா காலா முடிஞ்சதுக்கு அப்பறம் தான் எத இருந்தாலும் யோசிக்கணும்.பொதுவா நான் பிளான் பண்றது எதும் நடக்காது தலைவா அதனால பிளான் பண்றதே இல்ல" என்று சிரித்தபடி பதிலளித்தார்.

கா.க.போ தொடங்கி இன்று காலாவில் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கின்ற தருணத்தை எப்படி உணர்க்கின்றிர்கள்?

ரஜினி சார் இந்த தொழில எவ்வளோ மதிக்கிறாருனு அவரை ஷூட்டிங் ஸ்பாட்ல பார்த்தா தான் தெரியும். அவர் நடந்துபோய் நிக்குற ஷாட்டா இருந்தாலும் அத எந்த அளவுக்கு ஸ்டைலா பண்ணமுடியுமோ அந்த அளவுக்கு ஸ்டைலா பண்ணுவார். ஒரு சின்ன ஃப்ரேம்க்கு கூட அவ்ளோ இம்பார்ட்டன்ஸ் குடுத்து, ரசிச்சு நடிப்பார். அது மட்டுமில்லாம, அவருக்கு இருக்க அனுபவத்துக்கு டயலாக் மட்டும் பேசிட்டு போயிரலாம் ஆனா, அந்த சீன அடுத்த கட்டத்துக்கு எப்படி நகர்த்தலாம், நம்மள சுத்தி இருக்க கேரெக்டர்ஸ் எப்படி இருந்தா நல்ல இருக்கும், அப்படினு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து நடிப்பார். ஒரு சின்ன விஷயம் பண்ணாலும் அத அதீதமா காதலிச்சு பண்ணணுன்னு ரஜினி சார்கிட்ட இருந்து கத்துக்கிட்டேன். நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சுருச்சுனு சந்தோசப்படுற நேரத்துல அத சரியா பயன்படுத்திக்கனுன்ற பயம் தான் அதிகமா இருக்கு. ஒவ்வொரு நாளும் ஒரு விஷயம் கத்துக்கிட்டு தான் இருக்கேன்." என்ற தெளிவான சிந்தனையுடன் நம்மிடம் இருந்து விடைபெற்றார் மணிகண்டன்.

Please publish modules in offcanvas position.