ஐந்து வருடங்களின் பின்னர் வெற்றியை சுவைத்தது அவுஸ்திரேலியா

ஐந்து வருடங்களின் பின்னர் வெற்றியை சுவைத்தது அவுஸ்திரேலியா

/ Wednesday, 11 October 2017 07:01

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இந்தியாவில் நடைபெற்று வரும் இருபதுக்கு-20 தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி எட்டு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

ஜேசன் பெஹ்ரெண்ட்டொப் இன் சிறந்த பந்துவீச்சு மற்றும் மொய்சஸ் ஹென்ட்ரிக்கஸ், ட்ரவிஸ் ஹெட் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டம் இந்தப்போட்டியில் அவுஸ்திரேலியா அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

2012ஆம் ஆண்டுக்கு பின்னர் அவுஸ்திரேலியா அணி இந்தியா அணியை இருபதுக்கு-20 போட்டி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து இந்தியா அணி 7 போட்டிகளில் தொடர்ச்சியாக அவுஸ்திரேலியா அணியை வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளும் 15 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இது அவுஸ்திரேலியா அணிக்கு ஐந்தாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

குவாத்தியில் நடைபெற்ற இந்தப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் இந்தியா அணியை துடுப்பாட பணித்தது. இந்தியா அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது 118 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 13 ஓட்டங்களுக்கு முதல் இரண்டு விக்கெட்களை இழந்த போதும், மூன்றாவது விக்கெட்டுக்காக முறியடிக்கப்படாத 109 ஓட்டங்களை, மொய்சஸ் ஹென்ட்ரிக்கஸ், ட்ரவிஸ் ஹெட் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

15.3 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங்களை அவுஸ்திரேலியா அணி பெற்றது.

போட்டியின் நாயகனாக ஜேசன் பெஹ்ரெண்ட்டொப் தெரிவானார். இந்த வெற்றியின் மூலமாக மூன்று போட்டிகளடங்கிய தொடர் 1-1 என சமநிலை பெற்றுள்ளது.

Please publish modules in offcanvas position.