இலங்கைக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது மேற்கிந்திய தீவுகள்

இலங்கைக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது மேற்கிந்திய தீவுகள்

/ Thursday, 12 October 2017 10:53

இலங்கை மகளிர், மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஒரு நாள் சர்வதேசப்போட்டியில் ஆறு விக்கெட்களினால் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் மகளிர் சம்பியன்ஷிப் தொடரின் முதற் போட்டியாக இது அமைந்துள்ளது. ஆண்களுக்கான போட்டிகளில் சம்பியன்ஷிப் போட்டிகளை ஆரம்பிப்பதில் இழுபறி நிலை இருந்துவரும் நிலையில் மகளிருக்கான போட்டிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி இரண்டு புள்ளிகளைப்பெற்றுள்ளது.

மூன்று போட்டிகளடங்கிய தொடரின் முதற் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் யசோதா மென்டிஸ் 34 ஓட்டங்களையும், டிலானி மனோதரா ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும், சாமரி அத்தப்பத்து 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அபி பிளெட்சர், ஹெய்லி மத்தியூஸ், ஸ்டபனி டெய்லர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைபப்ற்றினார்கள். இந்த மூவருமே சுழற் பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 39 ஓவர்களில் நான்கு விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களைப்பெற்றது. இதில் மெலிசா அகுய்லெரியா ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும், செடீன் நேசன் 24 ஓட்டங்களையும், ஹெய்லி மத்தியூஸ் 22 ஓட்டங்களையும், டீன்றா டொட்டின் 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இனோகா ரணவீர இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்.

Please publish modules in offcanvas position.